Wednesday, August 27, 2014

கைப்பேசி


        அந்த ஒட்டுக்குடித்தன காம்பவுண்டில் அவன் தங்கியிருந்த வீட்டைப் பூட்டித் திரும்புகையில் எதிர் வீட்டு வாசலில் ஒரு கைப்பேசி கிடப்பதைப் பார்த்தான். வீட்டினுள்ளே ஒரு குழந்தை மட்டும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது. அக்கம் பக்கம் நோட்டம் விட்டான். யாருமில்லை. மெல்ல நடந்து அருகே சென்று எடுக்க குனியும்போது, எதிர் வீட்டினுள்ளேயிருந்து அந்த வீட்டுப்பெண்மணி வேகமாக வந்து கைப்பேசியை எடுத்துக்கொண்டு அவன் மேல் ஓர் பார்வைக் கணையை வீசிவிட்டு உள்ளே சென்றாள். அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த குழந்தையின் தலையில் குட்டிவிட்டு போனவள் அவள் கணவனை அழைக்க, உடனே அங்கிருந்து நகர்ந்து அவசரமாக காம்பவுண்ட் வாயிலை திறந்து வெளியேறினான்.

சாலையெங்கும் நிறைந்து தாரின் கருப்பைக் காணமுடியாதவாறு நெரித்து நின்ற வாகனங்களை வெறித்தபடி நடந்து கொண்டிருந்தவன், எங்கோ இடித்து தன் நடை தடைபட நின்றான். இருவது வயதிற்கு சற்றும் மிகாத ஒரு பெண் நின்று அவனை முறைத்துக்கொண்டிருந்தாள். அவள் உதடுகள் மேலும் கீழும் குவிந்து விரிந்து வேகமாக அசைந்தன, இரத்த நிறத்தில் அவ்விதழ்கள் நடனமிடுவதைக் கண்டவன், லேசாக உதடு பிரித்தான். அவளை இடித்தோமென்ற எந்த பிரக்ஞையுமில்லாமல், அவன் பார்வை கீழிறங்கியது, மேனியெங்கும் மேய்ந்த அவன் விழிகள் அவள் கையில் பிடித்திருந்த கைப்பேசியில் நிலைப்பெற்றது. அவள் தன்னெதிரே கைநீட்டி ஏதோ சொல்ல தன்னை வசைபாடுகிறாள் என உணர்ந்தவன் தலைகுனிந்தபடி நின்றான். அவன் பார்வை கைப்பேசியிலிருந்து விலகவில்லை. அவர்களைக் கடந்து சென்று ஒரு பேருந்து நிற்க அப்பெண் விரைந்து சென்று ஏறிக்கொண்டாள். பேருந்து புறப்படும் தருவாயில் அவனும் ஓடிச்சென்று ஏறிக்கொண்டான்.

அவனைக் கண்டதும் அவள் கூட்டத்தினுள் புகுந்து முன்பகுதிக்கு சென்று நின்றாள். அவள் கைப்பேசி ஒலிக்க அதைக் காதில் கொடுத்தவள், கைப்பேசியுடன் கொஞ்சத் தொடங்கினாள். உரையாடியபடி திரும்பி நோக்க அவன் அருகிருந்த கம்பியை அணைத்தபடி நின்று அவளையே வெறித்துக்கொண்டிருந்தான். கலைந்த கேசம், கசங்கிய சட்டை, கழுத்துவரை படர்ந்த தாடியுடன் வாழ்வின் எல்லா அவமானங்களையும் பார்த்துவிட்ட, எஞ்சியிருக்கும் அவமானங்களையும் ருசித்துவிடும் பார்வை அவன் கண்களில். கைப்பேசிக்கு முத்தமிட்டு, பேசி முடித்து பையில் வைத்தவள், இன்னும் முன்னே சென்று காலியான இருக்கையில் அமர்ந்து கொண்டாள்

பார்வை விலகாமல் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றவனின் தொடையில் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன் சாய, அவனை பார்த்தான். உறங்கிக்கொண்டிருந்தவன் சட்டைப் பையில் ஓர் உயர் தர கைப்பேசி. கையை மெல்ல கீழிறக்கியவன். அருகே நோட்டமிட யாருமவனை கவனிக்கவில்லை என்றறிந்து முன்னேறினான். கையை சட்டையருகே கொண்டுசெல்லும் போது உறங்கியவன் விழித்துக்கொள்ள, எழுந்து நேரே அமர்ந்து மீண்டும் கண்ணயர்ந்தான். அமர்ந்திருந்தவனின் இருக்கையை பிடித்திருந்தவன், மறுபடியும் மெதுவாக கையை சட்டப்பையிடம் கொண்டுசென்றான். தீடீரென்று கைப்பேசி ஒளிர, அணைத்திருந்த கம்பியைப் பிடித்து கோபத்தில் முறுக்கினான். விழித்தவன் கைப்பேசியை எடுத்து காதினில் புதைத்து உரையாடலானான். அவன் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை அமர்ந்திருந்தவன் கையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான்.

கைப்பேசியுடன் பேசத்தொடங்கியவன் எதிரே ஆளிருப்பதைப் போல் கையை நீட்டி அசைத்துப் பேசிக்கொண்டிருந்தான். பரபரப்பானவன் உடனே இருக்கையிலிருந்து எழுந்து படியருகே வந்து நின்றுகொண்டு பேசினான். அவன் மேலிருந்த பார்வை அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தவன், பேருந்து நிற்பதற்கு முன்னரே அவன் குதித்திறங்குவதைக் கண்டு விரைந்து சென்று இறங்கினான். கைப்பேசிக்காரன் சாலையை ஓடிக்கடந்து மறைந்திருந்தான். முகத்தில் ஏமாற்றம் அப்ப திரும்பி நடந்தவன் அருகிலிருந்த ஓர் உணவகத்தை அடைந்து உள்ளே சென்றான்

வாயிலை மறைத்தபடி ஆஜானுபாகுவான தோற்றத்துடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார், பட்டு வேட்டி சட்டையணிந்து நின்றிருந்தவரின் பத்து விரல்களுகும் பளபளத்தன, கழுத்தில் தடிமனான சங்கிலி. அவை எதையும் பொருட்டாக்காத அவன் கண்கள் அவர் கையில் பிடித்திருந்த கைப்பேசியில் நிலைத்தது. தடாலெனத் திரும்பியவர் கைப்பேசியை காதோரம் வைத்து வானைப் பார்த்துக்கொண்டு நின்றார். அகலமான அக்கருவி அவரின் முகத்தையே மறைத்தது. கைகளைக் காற்றில் அலைந்து பேசியவர் தன் சட்டைக் காலரை தூக்கி விட்டுக்கொண்டார், அவ்வப்போது வெடித்து சிரித்து வலக்கையால் தன் தொடையில் அறைந்துகொண்டார். மெல்லிய நகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவன் முதுகில் யாரோ அறைய பதறி திரும்பினான்.

பின்னால் உணவக உரிமையாளர் அவனை உள்ளே சென்று வேலையை கவனிக்குமாறு கட்டளையிட்டார். உள்ளே போனவன் உணவு விடுதியில் பணியாற்றுபவரின் உடையணிந்து வந்து மேசைகளை துடைக்க தொடங்கினான். ஏமாற்றம் தலைக்கேறியது.    கோபத்தை வேலையில் காட்டினான். மேசையை வேகமாக துடைக்க எச்சங்கள் தெறித்து விழுந்தன, சக தொழிலாளி ஒருவன் இவன் தலையில் தட்டி ஒழுங்காய் வேலை செய்யுமாறு சொல்லிப் போனான். சென்றவனை முறைத்தபடி நின்றவன் திரும்ப எதிரே இருந்த மேசையில் ஒரு சிறுமி தனியே அமர்ந்து அவன் கைப்பற்றத் துடிக்கும் சாதனத்துடன் விளையாடிக்கொண்டிருந்தாள். மீண்டும் பரபரப்பானவன் கண்களில், இம்முறை தவறவிடக்கூடாதென்ற முனைப்பு. கைப்பேசியில் இருந்து கண்களை சற்றும் அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அச்சிறுமியை யாரோ அழைக்க திரும்பிபார்த்தாள். கைகழுவும் இடத்தருகே ஒரு தம்பதியர் நின்றிருந்தனர். அவளின் பெற்றோராய் இருக்க வேண்டும். அவர்களின் அருகே இன்னும் சிலர் நின்றிருக்க அச்சிறுமியை கைநீட்டி அழைத்தனர். சிறுமி இருக்கையில் இருந்து எழுந்தாள். தன் எண்ணம் இம்முறையும் ஈடேறாது என நினைத்தவன் கண்களில் ஆச்சரியம். கைப்பேசியை மேசை மேல் விட்டுவிட்டு அவர்களை நோக்கி ஓடினாள் அச்சிறுமி. மெல்ல நகர்ந்து அருகே சென்றவன் யாரும் காணாதவாறு கைப்பேசியை எடுத்து பையில் போட்டுக்கொண்டு நகர்ந்தான்.


கழிவறைக் கதவை தாழிட்டு தன் பையிலிருந்த அலைபேசியை எடுத்து கண்கள் விரிய பார்த்தான். பிறந்த மகவை கையிலேந்தியிருப்பதைப் போல் உணர்ந்தவன் முகத்தில் கனவை நனவாக்கிய மகிழ்ச்சி. தானாக உதடுகள் பிரிந்து மஞ்சள் பற்களைக் காட்டின. நெஞ்சு விம்மி துடித்தது, இதயம் எகிறி வாய் வழியே விழுந்துவிடுவதைப் போலிருந்தது. இமைகள் நனைய அதை பார்த்துக்கொண்டிருந்தவன் வேகமாக எண்களை அழுத்தினான், எண்ணிக்கையின்றி அழுத்தி காதோரக் கேசத்தினுள் புதைத்தான். எதிர்புறமிருந்து எந்த ஒரு மறுபடிக்கும் காத்திராமல் பேசத்தொடங்கினான் .

“பேபே”

அதையே திரும்பச் சொன்னான், அதை மட்டுமே சொன்னான். நூறுமுறை, ஆயிரம் முறை “பேபே”. அவன் கேள்விகளுக்கு அவனே பதிலுறைத்தான். வேறு உணர்ச்சிகளில், வெவ்வேறு சப்தங்களில் பேசினான். கைப்பேசியை காதொடு அழுத்தினான். அவன் காதலனானான், அவனே காதலியுமானான். முத்தமிட்டான், கொஞ்சி சிரித்தான், கோபித்துக்கொண்டான். அதிர்ச்சியுற்றவனைப் போல் பேசினான், கைகளை நீட்டியுயர்த்தி காற்றில் அலைந்து, காலரைத் தூக்கிவிட்டுகொண்டு, தொடையில் அறைந்துகொண்டு, பெருங்குரலெடுத்து சிரித்தபடி பேசினான். சிறுமியைப்போல் சினுங்கினான். 

அனைத்தும் “பேபே” எனும் வார்த்தையாலேயே அல்லது சத்தத்தினாலேயே உரைத்தான்.
ஆசை தீர பேசிமுடித்தவன் கத்தியழுதான். அத்தனை அவமானங்களையும் கண்ணீராய் உதிர்த்து ஓய்ந்தபின் கையிலிருக்கும் சாதனத்தை ஒரு  பிண்டத்தைப்போல் பார்த்தான். பார்வையில் அருவருப்பு கூடியது. 

 கழிவறையைத் திறந்து வெளியே வந்தவன் நடந்து அச்சிறுமி அமர்ந்திருந்த மேசையருகே சென்றான். அவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. யாருமறியா வண்ணம் மேசைமேல் கைப்பேசியை வைத்துவிட்டு நிதானமாக மேசையை சுத்தப்படுத்தத் தொடங்கினான்.


Sunday, July 27, 2014

கொசுவத்திச் சுருள் -1 ”ஆடுகளம்”

அந்த வருஷம் பொங்கலுக்கு ரிலீசான ஒரு படத்த எப்படியாவது முதல் நாளே பாத்துடனும்னு நானும் ஸ்ரீநாத்தும், நெட் பிராக்டீஸ சீக்கிரம் முடிச்சுட்டு புறப்பட்டோம். மணி 2:00 ஆச்சு, 2:45க்கு ஷோ. அவசர அவசரமா கிட் பேக்ல எல்லாத்தயும் எடுத்து போட்டுட்டு கிளம்புறப்போ “jog 2 rounds” கோச் கத்துனாரு. கிட் பேக அப்படியே போட்டுட்டு ஓட ஆரம்பிச்சோம். ஜாகிங் எல்லாம் இல்ல, நாய் துரத்துன மாதிரி தல தெறிக்க ஓடினோம். ரெண்டு ரவுண்ட் முடியும்போது மணி 2:15. உடனே கிட் பேக தூக்கீட்டு ஸ்டேடயத்தோட அடுத்த பக்கத்துல இருந்த வாசலுக்கு  மறுபடியும் ஓடிப்போய் பஸ் ஏறினோம்.

காந்தி ஸ்டேடியத்தில் இருந்து சேலம் பழைய பஸ் ஸ்டேண்டுக்கு போக சரியா 5 நிமிஷம் தான். ட்ராபிக் இருந்தா 10. நடந்தே கூட போலாம். ஆனா நேரம் இல்ல. நாங்க பஸ் ஸ்டேண்ட் போய் சேறும்போது மணி 2:25. பஸ் நிக்குறதுக்கு முன்னாடி ரன்னிங்க்லயே இறங்கி ஓட ஆரம்பிச்சோம்.

 சரியா 2:30க்கு கீதாலயா தியேட்டர் வாசல்ல இருந்தோம். ஏகப்பட்ட கூட்டம். டிக்கட் கிடைக்குமான்னே தெரியல. ஸ்ரீநாத் “வீட்டுக்கு போலாம் வாடா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டான். ஆனாலும் விடாம அடிச்சு பிடிச்சு கவுண்டர்ல புகுந்து மன்னன் ரஜினி, கவுண்டமணி மாதிரி முன்னேறிப் போய் டிக்கட் வாங்கிட்டு உள்ள போய்ட்டோம். தியேட்டர் உள்ள போக டிக்கட் கிழிக்கும்போதுதான் ஸ்ரீநாத் அந்த கேள்வியக் கேட்டான்.

 “மச்சான் கிட் பேக் எங்கடா?”

எனக்கு உசுறே போயிடுச்சு. எங்க விட்டேன்னு சுத்தமா ஞாபகமில்ல. யோசிச்சு பாத்தப்போ ஸ்டேடியம்ல விட்டுருந்தா பிரச்சனையில்ல, எடுத்து வெச்சுறுப்பாங்க. பஸ்ல விட்டுருந்தா? அவ்வளவு தான், என் புது காஷ்மீர் வில்லோ பேட், பேடு, க்ளவுஸ்னு கிட்டத்தட்ட நாலாயிரம் காலி. அப்போ தான் அவன் அடுத்த குண்ட போட்டான்.

“மச்சா பஸ்ல தாண்டா விட்டுருக்கோம், ஸ்டேடியம்ல இருந்து ஓடிவந்து பஸ்ஸேரும்போது பேக் இருந்தது. இறங்கும்போது ரன்னிங்ல இறங்குனதால எடுக்காம விட்டுட்டோம்”.

“போச்சா?” எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போலிருந்தது. அம்மா கையில் தொடப்பக்கட்டையுடன் கண்முன் வந்து சென்றார்.

எனக்கு இப்படியென்றால் அவன் அழுதேவிடுவான் போலிருந்தது. அவனுடையது இங்க்லீஷ் வில்லொ பேட். அது மட்டுமே ஐய்யாயிரம் ரூபாய்.

“டேய் வாடா போய் பாக்கலாம்”

“இனிமே எங்க போய் பாக்குறது, அவ்வளவுதான் எல்லாம் போச்சு” எனக்கு சுத்தமாக நம்பிக்கையிக்ல்லை.

“ இல்லடா அந்த கண்டக்டருக்கு நம்மள தெரியும். அவர் கண்டிப்பா எடுத்து வெச்சுருப்பாரு. இது லஞ்ச் ப்ரேக் பஸ் இன்னும் கிளம்பியிருக்காது வா”

“ஒரு வேல பஸ் போயிருந்தா?”

“அப்படி போயிருந்தா கூட கிட் பேக டிப்போ’ல குடுத்துட்டு தான் போயிருப்பாங்க, நீ முதல்ல வாடா போய் பாக்கலாம்”

“உனக்கு கண்டிப்பா தெரியுமா?”

”தெரியும் வாடா”

“அப்ப சரி மச்சான், இன்னும் கொஞ்ச நேரத்துல படம் போட்டுறுவாங்க பாத்துட்டு போலாம்”

“டேய்” அடித்துவிடுவான் போல் இருந்தது.

“ஸ்ரீ, மணி 2.35 ஆச்சு இப்போ போனா படம் போடுறதுக்குள்ள திரும்பி வர முடியாது”

“படம் பாக்கலேன்னா போகுது வாடா”

“இல்லடா எவ்வளவு நாளா பேசிட்டுருக்கோம், இந்த படம் ஃபர்ஸ்ட் டே பாக்கனும்னு. எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம், டிக்கட் கூட எடுத்தாச்சு இப்பொ போனா வேஸ்டாகிடும்டா”

“லூசு மாதிரி பேசாதடா. உனக்கு 50 ரூவா டிக்கட் ஐய்யாயிரம் ரூவா பேட்’ட விட பெருசா போச்சா?”

“அதான் எடுத்து வெச்சுறுப்பாங்கன்னு சொல்றல்ல. வா படம் பாத்துட்டு போலாம்”

“போடா ****** , உனக்கு இருந்தாலும் ******** ரொம்ப அதிகம்டா”

அவன் அன்று என்னைப் பார்த்த பார்வை இன்னும் ஞாபகமிருக்கிறது. ஏதோ ஒரு அருவருப்பான எலியனைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு டிப்போவிற்குப் போனான். நான் அமைதியாக படம் பார்க்க சென்றேன்.

அந்த படத்த அவ்வளவு பிடிவாதமா போய் பாக்க காரணம் படத்தோட நாயகனும், இயக்குனரும் தான். அது ஒரு அட்டகாசமான படம். அந்த படம் என்னோட ஆல்டைம் பேவரைட்’ல ஒன்னு. அந்த வருஷம் சிறந்த நாயகனையும் சேர்த்து மொத்தம் ஆறு தேசிய விறுது அந்த படத்துக்கு கிடைச்சது. அந்த படம் ஆடுகளம். அந்த ஹீரோ தனுஷ்.
இந்த காலகட்டத்துல ஒரு நடிகனுக்கு நான் விசிறின்னு சொன்னா அது தனுஷ்க்கு மட்டும் தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ்.

Sunday, July 20, 2014

சதுரங்க வேட்டை



“Money is always Ultimate”

“குற்றவுணர்ச்சி இல்லாம செய்யுற எதுவுமே தப்பில்ல”

“ஒருத்தன் உன்ன ஏமாத்தீட்டான்னா அவன எதிரியா நினைக்காத. ஒரு வகைல அவன் உனக்கு குரு. எப்படி ஏமாத்தறதுனு உனக்கு சொல்லிக்குட்க்குறான்”

“ஒருத்தன ஏமாத்தனும்னு முடிவு பண்ணீட்டா, அவன்கிட்ட இருந்து கருணைய எதிர்ப்பாக்காத, அவன் ஆசைய தூண்டு”

”ஒரு பொய் சொன்னா அதுல உண்மையும் கலந்துருக்கனும். அப்போதான் அது பொய்னு தெரியாது”

”அந்த பொண்ணுக்கு ரொம்ப கருணை காட்டுற’. ’அந்த கருணைய எப்படி காசாக்குறதுனு யோசி”

”தமிழ்நாட்ட சிங்கப்பூர் மாதிரி மாத்தி காட்டுறோம்னு சொல்லி ஓட்டு கேக்குறாங்க. பத்து வருஷத்துக்கு அப்புறமும் தமிழ் நாடு அப்படியே தான் இருக்குது. அப்போ அவங்க நம்மள ஏமாத்தீட்டாங்கன்னு தான அர்த்தம். இதுக்காக அவங்க மேல Case போட முடியுமா”

”நான் யாரையும் ஏமாத்துல. ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்”

“நாளைக்கு சம்பாதிக்க முடியுமானு தெரியாதவந்தான் சார் பணத்த சேத்து வெப்பான். எனக்கு அந்த பயம் இல்ல”

“நிதி இருந்தா போதும். நீதிய ஈசியா வாங்கீடலாம்”

“என்ன உங்களால ஒன்னும் பண்ண முடியாது சார். ஏன்னா நான் ஏழையும் இல்ல, கோழையும் இல்ல”

”இருக்குறத இல்லாததா காட்டனும், இல்லாதத இருக்குறதா காட்டனும் புரிஞ்சதா’.  ‘இல்ல’. ‘ குட். உனக்கு புரிஞ்சுட்டா நான் வேற Plan போடனும்”

“இந்த உலகத்துலயே ரொம்ப ஈசியான வேல பணம் சம்பாதிக்குறதுதான்”


படத்தில் எனக்கு மிக பிடித்தது இத்தகைய வசனங்கள் தான். படம் முழுக்க இன்னும் எத்தனையோ நல்ல வசனங்கள் போகிற போக்கில் நம்மை அசைத்துச் செல்கிறது.

                                                       

அடுத்ததாக என்னை மிகவும் கவர்ந்தது கதாபாத்திரங்கள். ஏமாற்றுக்காரணான கதாநாயகனின் பெயர். அவர் கதாப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கும் விதம் அத்தனை அருமை. கூடவே எப்பொழுதும் சுத்த தமிழில் பேசித்திரியும் தாதா, கதாநாயகனின் குருவாக வரும் கதாப்பாத்திரம், நாயகனை எப்பொழுதும் சந்தேகிக்கும் அடியாள், செட்டியார், ஈமூ கோழிப்பண்ணை முதலாளி, Real Estate வியாபாரி, தொலிழதிபர் என யதார்த்ததிற்கு நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களும் அவர்கள் நடித்திருக்கும் விதமும் அட்டகாசம்.

குறிப்பாக நாயகன் நட்ராஜ். ஏமாற்றுப் பேர்வழியாக இவரின் உடல் மொழியும், முகபாவனைகளும் அட்சர சுத்தம். ஆசையைத் தூண்டும் பேச்சால் மக்களை ஏமாற்றும் இடத்திலும், உண்மை தெரிந்துகொள்ள போலிப்பாசம் காட்டும் போலிஸ் கான்ஸ்டெபுளைக் கலாய்க்கும் இடத்திலும் வெகு இயல்பாக ரசிக்கவைக்கிறார். வெள்ளை வேட்டிச் சட்டையில் தெனாவட்டாக கோர்ட்டிலிருந்து வெளியே வரும் அந்த காட்சியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

அத்தியாயம் அத்தியாயமாக போய்க்கொண்டிருக்கும் படத்தை இறுதிவரை அப்படியே கொண்டுபோயிருந்தால் படம் இன்னும் பட்டாசாயிருந்துருக்கும். நம்மை ஏதோ ஒரு இடத்திலேனும் படத்தோட சம்மந்தப்படுத்திக்கொள்ளுமாறு சம்பவங்களையும் காட்சிகளையும்  அமைத்திருப்பது திரைக்கதையின் சிறப்பு. சமகாலத்தில் தமிழில் நடந்துகொண்டிருக்கும் புதிய முயற்சிகளில் ஓர் குறிப்பிடத்தக்க படமென இதைச் சொல்லலாம். இசை, எடிட்டிங், போட்டோகிராபி பற்றியெல்லாம் பேச அதில் அ’னா ஆ’வன்னா கூடத் தெரியாது. இயக்குனர் வினோத்திற்கும், நாயகன் நட்ராஜுக்கும், தயாரிப்பாளர் மனோபாலாவிற்க்கும் ஒரு நல்ல சினிமாவைக் கொடுத்ததற்காக வாழ்த்துக்களும், நன்றியும்.



Saturday, July 19, 2014

வேலையில்லா பட்டதாரி




 
 
      D25னு tag line’னோட வெளிவந்திருக்கும் தனுஷின் 25வது படம். தலைப்பே கதை சொல்லுது. ஏற்கனவே வெளிவந்து ஹிட்டான பாடல்களும், டிரைலரும் ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்போடு தியேட்டருக்கு போனா ரோட்ட மறிக்குற அளவுக்கு கட் அவுட், பேனர்னு ஒரே அதகளம். சத்தியமா தனுஷுக்கு இந்த மாதிரி ஓப்பனிங் இதுக்கு முன்னாடி இருந்ததில்ல. இத்தனைக்கும் அவர் கடைசியா (தமிழில்) நடிச்ச 4 படமும் சரியா போகல. 
 

        படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியுற வரைக்கும் தனுஷோட வெறியாட்டம் தான். மனுஷன் இறங்கி விளையாடிருக்காரு. டயலாக் டெலிவரி, டான்ஸ், பாடி லாங்குவேஜ் எல்லாமே பக்கா. தம்ம பத்தவச்சுட்டு புருவத்த தூக்கி பன்ச் சொல்லும் அந்த சீன் ஒரு உதாரணம். பாட்டில்ல தண்ணி ஊத்தி வெக்குறது, வீட்ட கூட்டி பெருக்குறது, செடிக்கு தண்ணி ஊத்துறது, கடைக்கு போறது, அம்மாவோட சீரியல் பாக்குறது, வேலைக்கு போற தம்பிய பாத்து கடுப்பாவுறது, ஓட்ட வண்டியில் ஊர் சுத்துறது, அப்பாக்கு தெரியாம வீட்டுக்குள்ள திருட்டு தம்மடிச்சு மாட்டிக்கிறது, சரக்கடிச்சுட்டு வந்து அம்மாகிட்ட தொடப்பக்கட்டயால அடிவாங்குறதுனு ஒரு வேலையில்லா பட்டதாரி அனுபவிக்குற எல்லா கொடுமைகளும் படத்தில் உள்ளேன் ஐயா. 



இந்த கதாப்பாத்திரம் தனுஷுக்கு பொருந்தாம போயிருந்தா தான் ஆச்சரியம். எஞ்சினியரிங் மட்டும் இல்ல இந்த படம் பாக்குற எந்த ஒரு வேலையில்லாத, வேலையில்லாமலிருந்த பட்டதாரியும் இந்த கதாப்பாத்திரத்தோட தன்ன சம்மந்தபடுத்திப்பாங்க. வேலையில்லாம வீட்டுலயே கெடக்குறப்போ, உச்சி வெயில்ல மொட்ட மாடில படுத்து பொன்னியின் செல்வன் படிக்குற ஒரு காட்சி போதும் என்ன அந்த கேரக்டரோட ரிலேட் பண்ணிக்க. 


      படிச்சுட்டு வேலைக்கு போகாத, அதுவும் தம்பி இருக்குற பசங்களுக்கு படம் ரொம்பவே பிடிக்கும். தனுஷுக்கும் சரண்யாவுக்கும் இடையிளான காட்சிகளும், தனுஷ் சமுத்திரக்கனி இடையிளான காட்சிகளும் படத்தோட சிறந்த அத்தியாயங்கள்.  யாரும் கண்டுக்காத இந்த பொறியியல் பட்டதாரி விஷயத்த பத்தி பேசுனதுக்காக படத்த பாராட்டலாம். ஏன் படத்துல வராமாதிரி விஐபி’னு ஒரு சங்கம் ஆரம்ப்பிச்சு தனுஷுக்கு விழா எடுத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல. 


     பக்கத்து வீட்டுப் பொண்ணு அமலா பால்கிட்ட உதார் விடுறது, தம்பி கார் வாங்குனத பாத்து பொறாம படுறது, அப்பா அம்மா கூட சண்ட போட்டுட்டு வீட்டு மொட்ட மாடில குடுச்சுட்டு கலாட்டா பன்றதுனு போவுது முதல் பாதி. திடீர்னு ஒரு டிவிஸ்ட் (எதிர்பாத்ததுதான்) அப்போ இடைவேளை. இதுவரைக்கும் கதைல என்ன நடந்துருக்குனு யோசிச்சு பாத்தா எதுவும் இல்ல. முதல் பாதில கதை நகரலனு யாராவது சொன்னா தயவுசெஞ்சு நம்பாதீங்க. ஏன்னா முதல் பாதில கதை ஆரம்பிக்கவே இல்ல.




     சரி இரண்டாவது பாதிலயாவது கதை உடனே ஆரம்பிக்குதானு பாத்தா அதுவும் இல்ல. பத்து நிமிஷத்துக்கு அப்புறம் ஒரு பாட்டெல்லாம் முடிச்சுட்டு சாவகாசமா கதைய ஆரம்பிக்குறாங்க, உடனே இன்னோரு பாட்டு. சரி கதை என்னானு பாத்தா அதே பழகிப்போன நல்லவன் வாழ்வான் டெம்ப்ளேட். திரைக்கதைல எதாவது புதுசா இருக்கா? எதிர்பார்க்க முடியாத திருப்பம் எதாவது இருக்கா? நெஞ்ச பிழியுற ட்ராஜிடி இருக்கா? சமூகத்துக்கு எதுனா மெசேஜ் சொல்றாங்களா? ம்ஹூம் எதுவும் இல்ல. அப்போ படம் போறடிக்குதா? அதுவும் இல்ல, காரணம் தனுஷ். இத்தனை இல்லைகளோட இருக்குற ஒரு கதைய ஒரே ஆளா தாங்குறாரு. இப்படி பாராட்டுற அளவுக்கு தனுஷ் நல்லா நடிச்சிருக்காரானு கேட்டா, அதெல்லாம் இல்லங்க இந்த படத்துக்கு என்ன தேவையோ அத குடுத்துருக்காரு. சில இடங்களில் தேவைக்கு அதகிமாகவும் நடிச்சிருக்காரு ;) அவ்ளோ ஏன் ஒரு கட்டத்துல தனுஷ் இந்த படத்துலயும் சைக்கோவா மாறிடுவாறோனு கூட பயந்தேன். 


      அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக் எல்லாரும் அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கு பொருந்த்தமா நடிச்சுருக்காங்க. தனுஷே சொல்ற மாதிரி வில்லன பாக்கும்போது வில்லன் மாதிரி தெரியல, அமெரிக்க மாப்பிள்ளைக் கணக்கா எப்பவும் கோட்டோட சுத்துறாரு. படத்துல இவர் கோட் போடாத சீன் ஒன்னே ஒன்னுதான். மத்தபடி படம் மொத்தமும் தனுஷோட ஒன் மேன் ஷோ. எங்க அடிக்கனும், எப்படி அடிக்கனும்னு தெரிஞ்சுகிட்டு அங்க சரியா அடிச்சிருக்காரு.

     படத்தோட பெரிய ப்ளஸ் அனிருத்தோட இசை. இவரோட Contibution இல்லன்னா ரெண்டாவது பாதி தப்பிச்சுருக்காது. ஹைபிட்ச்சுல இவர் “தடை. அதை உடை’னு கத்தும்போது தியேட்டரே அதிருது. அடுத்ததா படத்துல எனக்கு ரொம்ப பிடிச்சது தனுஷோட, கன்னா பின்னா டான்ஸ். வெட்டிப்போட்ட பல்லி வால் மாதிரி ஆடிகிட்டே இருக்கார். “நான் வெறியானா விருமாண்டி”னு பல்ல கடிச்சுட்டு மீசைய முறுக்கும் போது விசில் சத்தம் காதக் கிழிக்குது. இந்த வருஷம் நடக்குற கல்லூரி விழாக்கள் எல்லாத்துலயும் ”வாட்ட கர்வாடும், ஊதுங்கடா சங்கும், விஐபியும் ஆக்கிரமிக்கும். 
 

      அதே மாதிரி வசனம். ”வேலைக்கு போகலனா, நாம பேர் வெச்சு வளர்த்துற நாய் கூட நம்மள மதிக்காது” 

“பேர்ல கூட partiality. அவனுக்கு மட்டும் ஹீரோ பேரு கார்த்திக். எனக்கு வில்லன் பேரு ரகுவரன்”

“எனக்கு கார்த்திக்க விட ரகுவரனதான் பிடிக்கும்”

“சாரீப்பா நான் கொஞ்சம் General audience மாதிரி நடந்துகிட்டேன்” வகையறா வசனங்களோடவே டிரைலர்ல பார்த்த வசனங்களுக்கும் தியேட்டர்ல செம அப்ளாஸ். முதல் நாள் படத்துக்கு போறதுல இதுதான் பிரச்சன. விசில் சத்தத்துல சில வசனங்கள் கேக்கவே இல்ல. 




      சமுத்திரக்கனி ஒரு இடத்துல “இவன் அம்மா செண்டிமெண்ட் என்னாலயே பொருத்துக்க முடியல”னு சொல்லுவாரு. அதேதான் நானும்சொல்றேன். மொத்தத்துல படம் ஒரு ஃபீல் குட் எண்டர்டெயினர். ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் ஒரு ஞாயித்துக்கிழமை மத்தியானம் இந்த படத்த டிவில போட்டா தாராளமா பாக்கலாம். 

      இந்த படத்தோட வெற்றி, படத்துக்கு கிடைச்சுருக்குற வரவேற்புலயே தெரியுது. அது மட்டுமில்லாம சமீபத்துல இதை விட பெரிய படம் எதும் ரிலீசாகுற மாதிரி தெரியல. அதனாலயே இந்த வருஷத்தோட மிகப்பெரிய வெற்றிப்படங்கள் வரிசைல இதுவும் ஒன்னா இருக்கும். D25 இதை விட சிறப்பா அமைய முடியுமானு தெரியல. ஆடுகளத்துக்கு அப்புறம் தனுஷ் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்திருப்பதில் மகிழ்ச்சி.

படத்தின் டிரைலரைப் பார்க்க
  

பி.கு.

1. இது விமர்சனமெல்லாம் இல்லீங்கோ. எனக்கு பிடிச்ச படத்துல, எனக்கு பிடிச்ச விஷயங்கள, எனக்கு தெரிஞ்சா மாதிரி எழுதீருக்கேன்.

2. முன்னதா இந்த படத்தோட Morning show’க்கு டிக்கெட் கிடைக்காத்தால சதுரங்க வேட்டை படத்துக்கு போயிருந்தேன். அந்த படமும் ரொம்ப நல்லாருக்கு.