Wednesday, August 27, 2014

கைப்பேசி


        அந்த ஒட்டுக்குடித்தன காம்பவுண்டில் அவன் தங்கியிருந்த வீட்டைப் பூட்டித் திரும்புகையில் எதிர் வீட்டு வாசலில் ஒரு கைப்பேசி கிடப்பதைப் பார்த்தான். வீட்டினுள்ளே ஒரு குழந்தை மட்டும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தது. அக்கம் பக்கம் நோட்டம் விட்டான். யாருமில்லை. மெல்ல நடந்து அருகே சென்று எடுக்க குனியும்போது, எதிர் வீட்டினுள்ளேயிருந்து அந்த வீட்டுப்பெண்மணி வேகமாக வந்து கைப்பேசியை எடுத்துக்கொண்டு அவன் மேல் ஓர் பார்வைக் கணையை வீசிவிட்டு உள்ளே சென்றாள். அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த குழந்தையின் தலையில் குட்டிவிட்டு போனவள் அவள் கணவனை அழைக்க, உடனே அங்கிருந்து நகர்ந்து அவசரமாக காம்பவுண்ட் வாயிலை திறந்து வெளியேறினான்.

சாலையெங்கும் நிறைந்து தாரின் கருப்பைக் காணமுடியாதவாறு நெரித்து நின்ற வாகனங்களை வெறித்தபடி நடந்து கொண்டிருந்தவன், எங்கோ இடித்து தன் நடை தடைபட நின்றான். இருவது வயதிற்கு சற்றும் மிகாத ஒரு பெண் நின்று அவனை முறைத்துக்கொண்டிருந்தாள். அவள் உதடுகள் மேலும் கீழும் குவிந்து விரிந்து வேகமாக அசைந்தன, இரத்த நிறத்தில் அவ்விதழ்கள் நடனமிடுவதைக் கண்டவன், லேசாக உதடு பிரித்தான். அவளை இடித்தோமென்ற எந்த பிரக்ஞையுமில்லாமல், அவன் பார்வை கீழிறங்கியது, மேனியெங்கும் மேய்ந்த அவன் விழிகள் அவள் கையில் பிடித்திருந்த கைப்பேசியில் நிலைப்பெற்றது. அவள் தன்னெதிரே கைநீட்டி ஏதோ சொல்ல தன்னை வசைபாடுகிறாள் என உணர்ந்தவன் தலைகுனிந்தபடி நின்றான். அவன் பார்வை கைப்பேசியிலிருந்து விலகவில்லை. அவர்களைக் கடந்து சென்று ஒரு பேருந்து நிற்க அப்பெண் விரைந்து சென்று ஏறிக்கொண்டாள். பேருந்து புறப்படும் தருவாயில் அவனும் ஓடிச்சென்று ஏறிக்கொண்டான்.

அவனைக் கண்டதும் அவள் கூட்டத்தினுள் புகுந்து முன்பகுதிக்கு சென்று நின்றாள். அவள் கைப்பேசி ஒலிக்க அதைக் காதில் கொடுத்தவள், கைப்பேசியுடன் கொஞ்சத் தொடங்கினாள். உரையாடியபடி திரும்பி நோக்க அவன் அருகிருந்த கம்பியை அணைத்தபடி நின்று அவளையே வெறித்துக்கொண்டிருந்தான். கலைந்த கேசம், கசங்கிய சட்டை, கழுத்துவரை படர்ந்த தாடியுடன் வாழ்வின் எல்லா அவமானங்களையும் பார்த்துவிட்ட, எஞ்சியிருக்கும் அவமானங்களையும் ருசித்துவிடும் பார்வை அவன் கண்களில். கைப்பேசிக்கு முத்தமிட்டு, பேசி முடித்து பையில் வைத்தவள், இன்னும் முன்னே சென்று காலியான இருக்கையில் அமர்ந்து கொண்டாள்

பார்வை விலகாமல் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றவனின் தொடையில் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன் சாய, அவனை பார்த்தான். உறங்கிக்கொண்டிருந்தவன் சட்டைப் பையில் ஓர் உயர் தர கைப்பேசி. கையை மெல்ல கீழிறக்கியவன். அருகே நோட்டமிட யாருமவனை கவனிக்கவில்லை என்றறிந்து முன்னேறினான். கையை சட்டையருகே கொண்டுசெல்லும் போது உறங்கியவன் விழித்துக்கொள்ள, எழுந்து நேரே அமர்ந்து மீண்டும் கண்ணயர்ந்தான். அமர்ந்திருந்தவனின் இருக்கையை பிடித்திருந்தவன், மறுபடியும் மெதுவாக கையை சட்டப்பையிடம் கொண்டுசென்றான். தீடீரென்று கைப்பேசி ஒளிர, அணைத்திருந்த கம்பியைப் பிடித்து கோபத்தில் முறுக்கினான். விழித்தவன் கைப்பேசியை எடுத்து காதினில் புதைத்து உரையாடலானான். அவன் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை அமர்ந்திருந்தவன் கையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான்.

கைப்பேசியுடன் பேசத்தொடங்கியவன் எதிரே ஆளிருப்பதைப் போல் கையை நீட்டி அசைத்துப் பேசிக்கொண்டிருந்தான். பரபரப்பானவன் உடனே இருக்கையிலிருந்து எழுந்து படியருகே வந்து நின்றுகொண்டு பேசினான். அவன் மேலிருந்த பார்வை அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தவன், பேருந்து நிற்பதற்கு முன்னரே அவன் குதித்திறங்குவதைக் கண்டு விரைந்து சென்று இறங்கினான். கைப்பேசிக்காரன் சாலையை ஓடிக்கடந்து மறைந்திருந்தான். முகத்தில் ஏமாற்றம் அப்ப திரும்பி நடந்தவன் அருகிலிருந்த ஓர் உணவகத்தை அடைந்து உள்ளே சென்றான்

வாயிலை மறைத்தபடி ஆஜானுபாகுவான தோற்றத்துடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார், பட்டு வேட்டி சட்டையணிந்து நின்றிருந்தவரின் பத்து விரல்களுகும் பளபளத்தன, கழுத்தில் தடிமனான சங்கிலி. அவை எதையும் பொருட்டாக்காத அவன் கண்கள் அவர் கையில் பிடித்திருந்த கைப்பேசியில் நிலைத்தது. தடாலெனத் திரும்பியவர் கைப்பேசியை காதோரம் வைத்து வானைப் பார்த்துக்கொண்டு நின்றார். அகலமான அக்கருவி அவரின் முகத்தையே மறைத்தது. கைகளைக் காற்றில் அலைந்து பேசியவர் தன் சட்டைக் காலரை தூக்கி விட்டுக்கொண்டார், அவ்வப்போது வெடித்து சிரித்து வலக்கையால் தன் தொடையில் அறைந்துகொண்டார். மெல்லிய நகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவன் முதுகில் யாரோ அறைய பதறி திரும்பினான்.

பின்னால் உணவக உரிமையாளர் அவனை உள்ளே சென்று வேலையை கவனிக்குமாறு கட்டளையிட்டார். உள்ளே போனவன் உணவு விடுதியில் பணியாற்றுபவரின் உடையணிந்து வந்து மேசைகளை துடைக்க தொடங்கினான். ஏமாற்றம் தலைக்கேறியது.    கோபத்தை வேலையில் காட்டினான். மேசையை வேகமாக துடைக்க எச்சங்கள் தெறித்து விழுந்தன, சக தொழிலாளி ஒருவன் இவன் தலையில் தட்டி ஒழுங்காய் வேலை செய்யுமாறு சொல்லிப் போனான். சென்றவனை முறைத்தபடி நின்றவன் திரும்ப எதிரே இருந்த மேசையில் ஒரு சிறுமி தனியே அமர்ந்து அவன் கைப்பற்றத் துடிக்கும் சாதனத்துடன் விளையாடிக்கொண்டிருந்தாள். மீண்டும் பரபரப்பானவன் கண்களில், இம்முறை தவறவிடக்கூடாதென்ற முனைப்பு. கைப்பேசியில் இருந்து கண்களை சற்றும் அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அச்சிறுமியை யாரோ அழைக்க திரும்பிபார்த்தாள். கைகழுவும் இடத்தருகே ஒரு தம்பதியர் நின்றிருந்தனர். அவளின் பெற்றோராய் இருக்க வேண்டும். அவர்களின் அருகே இன்னும் சிலர் நின்றிருக்க அச்சிறுமியை கைநீட்டி அழைத்தனர். சிறுமி இருக்கையில் இருந்து எழுந்தாள். தன் எண்ணம் இம்முறையும் ஈடேறாது என நினைத்தவன் கண்களில் ஆச்சரியம். கைப்பேசியை மேசை மேல் விட்டுவிட்டு அவர்களை நோக்கி ஓடினாள் அச்சிறுமி. மெல்ல நகர்ந்து அருகே சென்றவன் யாரும் காணாதவாறு கைப்பேசியை எடுத்து பையில் போட்டுக்கொண்டு நகர்ந்தான்.


கழிவறைக் கதவை தாழிட்டு தன் பையிலிருந்த அலைபேசியை எடுத்து கண்கள் விரிய பார்த்தான். பிறந்த மகவை கையிலேந்தியிருப்பதைப் போல் உணர்ந்தவன் முகத்தில் கனவை நனவாக்கிய மகிழ்ச்சி. தானாக உதடுகள் பிரிந்து மஞ்சள் பற்களைக் காட்டின. நெஞ்சு விம்மி துடித்தது, இதயம் எகிறி வாய் வழியே விழுந்துவிடுவதைப் போலிருந்தது. இமைகள் நனைய அதை பார்த்துக்கொண்டிருந்தவன் வேகமாக எண்களை அழுத்தினான், எண்ணிக்கையின்றி அழுத்தி காதோரக் கேசத்தினுள் புதைத்தான். எதிர்புறமிருந்து எந்த ஒரு மறுபடிக்கும் காத்திராமல் பேசத்தொடங்கினான் .

“பேபே”

அதையே திரும்பச் சொன்னான், அதை மட்டுமே சொன்னான். நூறுமுறை, ஆயிரம் முறை “பேபே”. அவன் கேள்விகளுக்கு அவனே பதிலுறைத்தான். வேறு உணர்ச்சிகளில், வெவ்வேறு சப்தங்களில் பேசினான். கைப்பேசியை காதொடு அழுத்தினான். அவன் காதலனானான், அவனே காதலியுமானான். முத்தமிட்டான், கொஞ்சி சிரித்தான், கோபித்துக்கொண்டான். அதிர்ச்சியுற்றவனைப் போல் பேசினான், கைகளை நீட்டியுயர்த்தி காற்றில் அலைந்து, காலரைத் தூக்கிவிட்டுகொண்டு, தொடையில் அறைந்துகொண்டு, பெருங்குரலெடுத்து சிரித்தபடி பேசினான். சிறுமியைப்போல் சினுங்கினான். 

அனைத்தும் “பேபே” எனும் வார்த்தையாலேயே அல்லது சத்தத்தினாலேயே உரைத்தான்.
ஆசை தீர பேசிமுடித்தவன் கத்தியழுதான். அத்தனை அவமானங்களையும் கண்ணீராய் உதிர்த்து ஓய்ந்தபின் கையிலிருக்கும் சாதனத்தை ஒரு  பிண்டத்தைப்போல் பார்த்தான். பார்வையில் அருவருப்பு கூடியது. 

 கழிவறையைத் திறந்து வெளியே வந்தவன் நடந்து அச்சிறுமி அமர்ந்திருந்த மேசையருகே சென்றான். அவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. யாருமறியா வண்ணம் மேசைமேல் கைப்பேசியை வைத்துவிட்டு நிதானமாக மேசையை சுத்தப்படுத்தத் தொடங்கினான்.


4 comments: