மஞ்சள் நிற ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் அறையெங்கும் பரவியிருந்தது. நான் சுவர்கடிகாரத்தைப் பார்த்தபடி படுத்திருக்கிறேன். இவ்வுலகில் அந்த கடிகாரத்துடன் தனித்துவிடப்பட்டவனைப் போல். என்னை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் காலம் தன்னைக் கடத்திக்கொண்டிருக்கிறது. நொடிமுள்ளின் அந்த அந்தமில்லா பயணம் என்னை வெகுவாக துன்புறுத்துவதை அதற்கு எப்படிச் சொல்வது. நள்ளிரவு. நிசப்தம். தனிமை. அனைத்தும் என்னை வாட்டிக்கொண்டிருக்கிறது. இவை எதுவும் புதிதல்ல, பதின்பருவத்தின் தொடக்கத்திலிருந்தே நான் தனிமைக்கு வாக்கப்பட்டவன் தான். தனியன். தனிமை என்றால் யாரும் உடன் இல்லாதிருக்கையில் மட்டுமல்ல, வகுப்பறையிலும், கடைவீதிகளிலும், மைதானத்திலும், திருவிழாக்களிலும் இன்னும் கூட்டம் கூடும் எல்லா இடங்களிலும் கூட நான் தனியன் தான். காரணம் இதுவென்று தெரியாது. காரணம் இருக்கிறதா என்றுகூட தெரியாது. ஏனோ, நான் வருந்துவதெல்லாம் பிறருக்கு சிரிப்பையளிக்கும், என் சிரிப்பினால் வருத்தமைடந்தவர்களும் உண்டு. எனவே நான் தனிமையை தேடிக்கொண்டேன், அதற்காக நான் தனிமை விரும்பியும் கிடையாது. கல்லூரியில் அம்மாஞ்சி, தயிர்சாதம், ட்யூப் லைட் என்றெல்லாம் அழைக்கப்பட ஒருவன் இருப்பானல்லவா? அது நானே. கடந்த மூன்றரை வருடங்களாக என்னையும் அப்படித்தான் அழைத்துவருகிறார்கள். ஆகவே தனிமை எனக்கு புதிதல்ல, ஆனால் நாளை மற்றுமொரு நாளல்ல. இதோ இன்னும் சில வினாடிகளில் எனக்கு பிறந்தநாள். இந்நாளை உலகமே கொண்டாடக் காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் நினைப்பது சரிதான். நிச்சயமாக நான் பிறந்ததற்காக அல்ல. நாளை பிப்ரவரி 14. மனித வாழ்க்கயின் உன்னதம் காதல். உயிர்களின் கொண்டாட்டம் காதல். அத்தகைய காதலைக் கொண்டாட ஒரு தினம். அந்நாளில் பிறந்த நான் 22 வயதிலும் தனியன். It's a fucking irony you know. 57, 58, 59, 12.00. அறைத் தோழனின் செல்போன் ஒலிக்கிறது.
"Happy Valentine's day dear. mmuuaah "
வராண்டாவில் ஒருவன் அரை மணியாக கடலை வருத்துக்கொண்டிருக்கிறான். காதலி இல்லாததைவிட கொடுமை உடனிருக்கும் அனைவரும் காதலிப்பது. தனியனாக என்னால் என் பிறந்தநாளைக் கொண்டாடிவிடமுடியும். ஆனால் காதலர் தினம்???... இன்னும் சற்று நேரம் போனால் மன்மதன் சிம்புவாகிவிடுவேன். போர்த்திக்கொண்டு துங்கவேண்டியதுதான். அதற்குமுன் எனக்குள் சொல்லிக்கொண்டேன் "Happy Birthday Appu".
இரவு எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. புலரி கிரணங்களை ஜன்னல் வழியாக பாய்ச்சிக்கொண்டிருக்கிறது. மூன்று மூதேவிகளும் அறையிலில்லை. அதிகாலை என்பது அவர்கள் அகராதியில் இருந்ததே இல்லை. இன்று ஏழு மணிக்குள் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட சாத்தான்கள். செல்போனை எடுத்துப்பார்த்தால் எந்த notificationம் இல்லை, வால்பேப்பரில் புத்தர் தேமே என சிரித்துக்கொண்டிருந்தார். முகப்பத்தகத்தில் வாழ்த்தியிருந்த இருவருக்கும் நன்றி சொல்லி லைக்கிவிட்டு, குளிக்கச்சென்றேன்.
அறையைப் பூட்டிக்கொண்டு செல்கையில் அம்மா போன் செய்தாள். பேசிமுடிக்கையில் ஹாஸ்டல் வாசலையடைந்திருந்தேன். சாப்பிடப் பிடிக்கவில்லை மெஸ்ஸுக்கு செல்லாமல் திரும்பி வெளியே நடந்தேன். . இன்று சனிக்கிழமையாதலால் கல்லூரி விடுமுறை. எங்கே செல்வது?. அம்மா கோவிலுக்கு போகச்சொன்னது ஞாபகம் வந்தது. நேராக கோவிலுக்கு நடையைக் கட்டினேன். போன் சின்ன சினுங்களுடன் அலறியது. பேஸ்புக்கிலும், வாட்சாப்பிலும் காதல் கவிதைகளாக பொழிந்துகொண்டிருந்தனர். 25 நோட்டிபிகேசன், திறந்து பார்த்தால் 7 போட்டோக்களில் டேக் செய்யப்பட்டிருந்தேன். கடுப்பில் போனை அணைத்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தேன். தும்பிக்கையில் லட்டுடன் பிள்ளையார் வரவேற்றார். சம்பிரதாயமாக பிரகாரத்தைச் சுற்றி வணங்கிவிட்டு, பொங்கல் பிரசாத்தத்தை வாங்கிக்கொண்டு ஒரு தூணில் சாய்ந்தமர்ந்தேன்.
பொங்கலை வாயில் வைத்ததும் சூடு தாங்காமல் துப்பிவிட்டேன். நாக்கு நன்றாக சுட்டுக்கொண்டது. சுடும் விரல்களை மாறி மாறி வாயில் வைத்தெடுக்கையில் சிரிப்பொலி கேட்டு இடதுபுறம் திரும்பினேன்.
நீலப்பட்டுடுத்தி, விழிமையிட்டு, முல்லை மலர் சூடி, முழங்காலைக் கட்டிக்கொண்டு, வெண்பிறைத் தெரிய சிரித்துக்கொண்டிருந்தாளொரு மாடர்ன் மகாலட்சுமி. நான் நடுவிரலை சப்பிக்கொண்டிருந்தேன். சுதாரித்து எழுந்து கையை உதறிக்கொண்டு அசடு வழியச் சிரித்தேன். அவள் பெயர் நந்தினி. கல்லூரியில் என் ஜூனியர். பார்த்த ஐந்தாவது நொடியில் காதல் கொள்ளச்செய்யும் அழகு. அவளை நோக்கி நடந்தேன்.
“ஹாய் மச்சான்”
அவளுக்கு நேரெதிரே இருந்த தூணில் காலைநீட்டி சாயந்தமர்ந்து என்னைப் பார்த்து சிரித்தான் தமிழ் செல்வன். பெயர்தானப்படி, முப்பது என சொல்லச்சொன்னால் நுப்பது என்பான்.
நந்தினி கல்லூரியில் சேர்ந்த பொழுது அவளுக்கு அம்புவிட்டுக்கொண்டிருந்த மன்மதன்களில் தமிழும் ஒருவன். அப்போது என் அறைத்தோழன். அவன் என் அறையில் தங்கியதற்கும் ஒரு காரணமிருந்தது. யாருடனும் அதிகம் பேசாத நந்தினி அவ்வப்போது என்னிடம் பேசுவாள். அதற்கு காரணம் இசபெல்லா மேடம். ஒரு நாள் நூலகத்திலிருந்து வெளியே வந்த என்னை நிறுத்தி, நந்தினிக்கு அறிமுகம் செய்துவைத்து
“உனக்கு எஞ்சினியரிங் கிராபிக்ஸ்ல எந்த சந்தேகம் இருந்தாலும் அப்பு கிட்ட கேளு. he got centum in EG. he is a bright student" என்றார்.
அன்று முதல் என்னைக் கடக்கும் போதெல்லாம் ஒரு மெலிதான புன்னகையை உதிர்ப்பாள். அந்த உறவை அடுத்தக் கட்டத்திற்கு எப்படி எடுத்துச்செல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அதற்கும் அவளே வழிசெய்தாள். அந்த நாள் இன்னும் அப்படியே நினைவிலுள்ளது. தன்னை நந்தினியிடம் அறிமுகப் படுத்த சொல்லி தமிழ் என்னைப் பாடாய்படுத்திக் கொண்டிருந்தான். நான் முடியாது என மறுக்க,
“மச்சி நீ என்ன சொன்னாலும் செய்றேன். ப்ளீஸ்” என கெஞ்சினான்.
நான் வன்மம் நிறைந்த விழிகளுடன் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன்.
“அப்படியா, சரி என் பேக தூக்கிட்டு வா” என்றேன். ச்சே இவ்வளவு தானா என் வன்மம். அவனும் அவ்வளவுதானா என்பது போல் என் பையை எடுத்து மாட்டிக்கொண்டு வந்தான். ஹாஸ்டலுக்கு செல்லும் வழியில் நந்தினி எதிர்பட்டாள். அவள் வருவதை தூரத்திலியே பார்த்தவன்.
“மச்சான் உண்ட தான் பேச வரா, அப்டியே என்ன இண்ட்ரோ பண்ணிவிடு”
அவன் சொன்னதை கவனிக்காமல் நடந்தேன். அவள் அருகே வந்ததும் “என்ன?” என்றேன்.
”லைப்ரரி போயிருந்தேன். EDC book எடுக்க. அங்க இல்ல, கேட்டப்போ உங்ககிட்ட இருக்குன்னு சொன்னாங்க. நெக்ஸ்ட் வீக் செமினார் இருக்கு. குடுத்தீங்கன்னா ரெபர் பண்ணீட்டு டூ டேஸ்ல திருப்பிக் குடுத்துடுறேன்”
என்று அவள் சொல்லி முடிக்கும் முன்
“இந்தாங்க..” என் பையிலிருந்த புத்தகத்தை எடுத்து நீட்டினான் தமிழ்.
“ Actually நான் தான் லைப்ரரில இருந்து எடுத்துட்டு வந்தேன். என் லைப்ரரி கார்ட ப்ரெண்ட்ஸ் வாங்கி தொலச்சுட்டாங்க, அதான் அப்பு கிட்ட எடுத்து தர சொன்னேன். நீங்க கொண்டு போங்க, நான் எல்லாம் படிச்சுட்டேன்” என்றான். நான் கண்கொட்டாமல் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மடைதிறந்த வெள்ளம்போல் பொய்சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு தெரிந்து அவனுக்கு முதல் வருடத்தில் மட்டும8 அரியர்கள் இருந்தன.
“தேங்க்ஸ்” நந்தினி.
“ஹே... இதுல என்ன இருக்கு.. என் நம்பர் நோட் பண்ணிக்கோ, ஏதாவது டவுட்னா, கால் பன்னு”
அதன் பிறகு அவர்கள் பேசியது எதையும் நான் கேட்கவில்லை. அவர்களும் என்னை கண்டுகொள்ளவில்லை. இன்று இதோ கோவில் தூணுக்கு பின் காதல் வடிக்கிறார்கள். கொஞ்சம் சுதாரித்திருந்தால் அங்கே தமிழுக்கு பதில் நான் இருந்திருப்பேன்.
“இங்க என்னடா பன்ற?” என்றான் என்னைப்பார்த்து. நான் பேசாமல் நின்றேன்.
“ஓ பொங்கல் வாங்கித்திண்ண வந்தியா?” சொல்லிவிட்டு அவனே சிரித்தான், அவளும் சேர்ந்துகொண்டாள். அழகான பெண்கள் அட்டு ஜோக்குகளுக்கு சிரிப்பதை எப்போது நிறுத்துவார்களோ..
”நீ என்னடா செய்ற இங்க?” என்றேன்.
“லவ்வர்ஸ் டே’ல, இவ கோவிலுக்கு போகனும்னு சொன்னா அதான்.”
அவள் வெட்கப்பட்டாள். “அட ராமா” என நினைத்துக்கொண்டேன். குரங்கு கையில் மாலை என்பதை கண்கூடாக பார்த்துகொண்டிருந்தேன். தாளமுடியாமல்
“சரி நான் வரேன்” என்றேன்.
“சாப்புட்டு போடா?”
“ இந்தா நீயே சாப்டு” பொங்கலை அவனருகில் வைத்துவிட்டு கிளம்பினேன்.
அவள் என்னைப் பார்த்து மெலிதாக சிரித்தாள்.
நான் இப்படியே ஹாஸ்டலுக்கு சென்றிருந்தாள் இந்த கதை இப்போதே முடிந்திருக்கும். என் விதி, நான் ஹோட்டலுக்கு சென்றேன். மினிவிசிறிக்கு கீழே நன்றாக காற்று வரும் இடமாக பார்த்து அமர்ந்துகொண்டேன். சர்வர் வந்தார்,
”சூடா என்ன இருக்கு?”
”பொங்கல்”
பல்லைக்கடித்துக்கொண்டேன்.
“வேற”
”தோசை, சப்பாத்தி, பூரி...”
“ரெண்டு சப்பாத்தி”
அவர் அங்கிருந்து நகர்ந்தார்.
சிரிப்பு சத்தம். திரும்பி பார்த்தேன். அனிதா. செல்போனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். நிமிர்ந்தவள் என்னையும் பார்த்து சிரித்தாள்.
“அப்பு!!!.. ஹாய்...” வியந்தபடி எதிரே வந்தமர்ந்தாள்.
“எப்படியிருக்க?”
“நல்லாருக்கேன். நீ எப்டி இருக்க?” நான் கேட்டேன்.
“நீயே பாத்து சொல்லு” என்றாள்..
எனக்கு தெரிந்து எல்லா பெண்களும் தங்களை அழகுபடுத்திக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால் வெகு சிலரே அதன்பின்னும் அழகாயிருக்கிறார்கள். இவள் அழகாயிருந்தாள்.
“you look pretty" என்றுதான் சொல்ல நினைத்தேன்.ஆனால்
“நல்லாதான் இருக்க” என்றுதான் சொல்ல முடிந்தது. அவள் முகம் சுருங்கியதுபோலிருந்தது. தன்னை வர்ணிக்காத ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. நேரடியாக வர்ணிப்பவனையும் பிடிப்பதில்லை.
அனிதா என் Class mate. சரியான பையங்கொள்ளி, தாழ்வு மனப்பான்மை கொண்டவள். என்னைவிட அதிகம். ஒரு கல்லூரியில் நடந்த கருத்தரங்கிற்கு எங்கள் கல்லூரியில் இருந்து என்னையும் அனிதாவையும் சேர்த்து குரு, கீர்த்தனா என நால்வர் சென்றிருந்தோம். கருத்தரங்கில் அனிதாவிடம் ஒரு பேராசிறியர் கேள்வி கேட்க, பதில் தெரிந்தும் பயத்தில் பேசமுடியாமல் ஆங்கிலமும் தமிழும் கலந்து சொன்னதையே அவள் திருப்பிச்சொல்லி திணறிக்கொண்டிருந்தாள். அருகே அமர்ந்திருந்த பையன்களெல்லாம், மேஜர் சுந்தர்ராஜன் குரலில் பேசி அவளைக் கலாய்க்க. அனிதாவின் கண்கள் வேர்க்க, என் நாடி துடிக்க, எழுந்து சென்று அவளுக்கு உதவிவிட்டு மீதி கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு அவளையும் அழைத்து வந்து என்னருகில் அமர்த்திக் கொண்டேன். இப்போது மாணவர்கள் என்னையும் சேர்த்து கலாய்க்க தொடங்கினர்.
அனிதாவிற்கு என்னை பிடித்துப்போனது. நன்றி ததும்பும் கண்களில் என்னைப் பார்த்தாள். நான் கெத்தாக கண்களைத் துடைக்குமாறு சைகை செய்தேன். கருத்தரங்கு முடிந்து வருகையில் ஒரு குழு மீண்டும் அனிதாவை கிண்டலடித்துக்கொண்டே வந்தனர். தலைகுனிந்து அழுத்தொடங்க அனிதாவை நானும் கீர்த்தனாவும் தேற்றிக்கொண்டிருக்க, குரு அவர்களிடம் சண்டையில் இறங்கினான்.
குரு எங்களைவிட இரண்டு வயது மூத்தவன். டிப்ளமோ படித்துவிட்டு எஞ்சினியரிங் சேர்ந்திருந்தான். முரடன். அது அவர்களுக்கு தெரியாதல்லவா, மூன்று பேரும் சேர்ந்து அவனை மொத்த, தடுக்க சென்ற எனக்கும் அடி, ஒரு வழியாக அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வருகையில் அவன் கையில் கிடைத்த கல்லை எடுத்து எறிய அது ஒருவன் கபாலத்தை பதம் பார்த்தது. குருவை இரண்டு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். அதன் பின் அனிதா என்னுடன் எப்போதும் பேசிக்கொண்டிருப்பாள், எங்களிருவரிடையில் ஒரு நல்ல வேதியல் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது காதலாக மாறும் தருவாயில், குருவின் ரீஎண்ட்ரி.
சஸ்பென்ஷன் முடிந்து வருகையில் கையில் கட்டுடன் வந்தான். கல்லெறிந்த கையை உடைத்துவிட்டனர். நேராக அனிதாவிடம் சென்று அமர்ந்தவன் சிம்பதி சிம்பொனி வாசிக்க, அவள் ஆழ்மனதில் நான் அடித்துவைத்திருந்த ஆணிகளெல்லாம் தேவையில்லாததாய் போனது. அதன் பிறகு அவள் என்னுடன் பேசுவது குறைந்தது. அந்த வருடம் விடுமுறையில் இண்டர்ன்ஷிப்பிற்காக டெல்லி சென்றிருந்தாள். திரும்பி வந்தவளிடத்தில் நிறைய மாற்றம். என்னிடமும் பேசுவதில்லை. அவளும் குருவும் காதலிப்பதாக கீர்த்தனா சொன்னாள். டெல்லி இண்டர்ன்ஷிப்பில் இருவருக்குமிடையே இயற்பியல் பரிமாற்றம் இருந்ததாக பல வதந்திகள் அவ்வப்போது வரும்.
இப்போது சப்பாத்தி வந்தது. பின்னாலேயே குரு வந்தான். அவனைப் பார்த்ததும் அனிதா எழுந்து “ஹாய் டா” என்றபடி கைநீட்டினாள். நீட்டிய கையில் ஒரு சிகப்பு ரோஜைவைக் கொடுத்துவிட்டு. “Happy valentine's day dear, you look pretty gorgeous" என்றான்.
முகமெல்லாம் பற்கள் தெரிய “தேங்க்ஸ்” என்றாள் அனிதா. இருவரும் அமர்ந்தனர்.
குரு “ என்ன மச்சான், நீ உன் லவ்வர பாக்க போலையா?” என்றபடி சப்பாத்தியை திண்ண ஆரம்பித்தான். நான் அவனை முறைத்தேன்.
“ஓகே ஒகே கூல், சாப்பிடு”
“எனக்கு பசிக்கல, நான் கெளம்பறேன். you people have fun" ஹோட்டலை விட்டு வெளியேறினேன்.
எங்கு செல்வதென்று தெரியவில்லை. இலக்கில்லாமல் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தேன். பூங்காவிற்குள் நுழைந்தவன் வெளியே வருவதற்குள் ஏக்கச்செக்க மாதொருபாகன்களைப் பார்த்திருந்தேன். மீண்டும் ஹாஸ்டலை நோக்கி நடக்கையில் மணி 9.00. செல்லும் வழியில் தெருமுக்கில் யாஸ்மின் நின்றிருந்தாள்.
யாஸ்மின். கருப்பு புர்க்காவில் வரும் தேவதை. இந்த வருடம் தான் எங்கள் கல்லூரியில் சேர்ந்திருந்தாள். முதல் நாள் ராகிங்கில் இரண்டாமாண்டு மாணவர்கள் அவளை மடக்கி வம்பிழுக்கையில் அவர்கள் தவடாவிலேயே போட்டு அவளை மீட்டுக்கொண்டு வந்தேன். அதன்பின் அவளை காதலிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலிருக்கையில். அவள் கடைக்கண் பார்வைகளும், இதழோரச் சிரிப்பும் கண்டு அவளும் என்னைக் காதலிப்பதாகத்தான் தோன்றியது. ஆனால் அவள் இங்கே இந்நேரத்தில் என்ன செய்கிறாள். அவளருகே சென்றேன்.
“இவ்வளவு லேட்டாவா வரது, எத்தன நேரம் வெய்ட் பன்றது?” நடந்து வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்துதான் கேட்கிறாளென நான் நினைப்பதற்குள்.
என் தோளை இடித்துக்கொண்டு ஒருவன் வந்து அவள் முன் நின்று.
“சாரி மா, ரொம்ப ரொம்ப சாரி. போலாமா?” என்றான்.
அவள் தலையாட்டி அவன் கையைப் பிடித்து நடக்கலானாள். என் கோபம் தலைக்கேறியது. எதையும் யோசிக்காமல் நேராக நடந்தவன் நின்றது டாஸ்மாக் வாசலில். கையிலிருந்த காசுக்கெல்லாம் பீர் வாங்கிக் குடித்துவிட்டு. ஹாஸ்டலுக்குத் திரும்பினேன்.
ஹாஸ்டல் வாசலில் கீர்த்தனா. . அவளுக்கும் எனக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். ஐந்து நிமிடம் நின்று பேசினால் சண்டையிட்டுக் கொள்வோம். காரணமே இல்லாமல் சண்டைபோட்டு கண்டபடி திட்டிவிட்டுப் போவாள், மறுபடி வந்த அப்படி ஒரு சண்டையே நடக்காததுபோல் பேசுவாள். அதனாலேயே அவளைப் எனக்குப் பிடிக்கும். அவளுக்கும் தான். யோசித்துப் பார்த்தாள், கல்லூரியில் நான் அதிகம் பேசியது இவளுடனாகத்தானிருக்குமென்று தோன்றுகிறது. மணி 11.50. கையைக்கட்டி, சுவரில் சாய்ந்து நின்று நான் வருவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். தெருவிளக்கு வெளிச்சத்தில் யட்சியைப் போல் காட்சியளித்தாள்.
”வாங்க சர், இதுதான் ஹாஸ்டல் வர நேரமா?” இடது புருவத்தை உயர்த்திக் கேட்டாள். வாட்ச்மேன் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
“அதெல்லாம் எப்படி உள்ள போறதுன்னு எனக்கு தெரியும். இந்நேரத்துல, நீ என்ன பன்னுற இங்க?”
“ காலேஜுல அம்மாஞ்சி மாதிரி இருந்துட்டு செய்யுறதெல்லாம் fraud வேல, உங்கிட்ட என்னடா சொன்னேன். 6 மணிக்கு ஹாஸ்டலுக்கு வர்றதா சொல்லியிருந்தேன்ல”
“ஸ்ஸ்ஸ்... மறந்துட்டேன், என்ன விஷயம்??” என்றேன்
“போன ஏன் ஆப் பண்ணி வெச்சுருக்க?”
“அது... காலைல இருந்தே... சார்ஜ் இல்ல” உளரினேன்
மூக்கை உரிஞ்சியவள் “ குடிச்சிருக்கியா நாயே??” ஆரம்பித்துவிட்டாள் இனி விடியும் வரை சண்டைபோடுவாள்.
நான் “ ஆமா” என்பதைப் போல் தலையாட்டினேன்.
ஓங்கி ஓர் அறை விட்டாள். போதையெல்லாம் இறங்கியதுபோலிருந்தது. தலையை உலுக்கிக்கொண்டு நிமிர்ந்தேன். அவள் கண்கள் பனித்திருந்தது.
“ நீ என்ன செஞ்சாலும் கேக்குறதுக்கு ஆள் இல்லன்னு நெனச்சியா?, கொன்றுவேன். இந்தா இதக் கொடுக்கத்தான் ஆறு மணி நேரம் காத்துட்டுருந்தேன்” என்றவள் ஒரு Greeting Cardஐ என்னிடம் நீட்டினாள்.
HAPPY BIRTHDAY மேலே என்று எழுதியிருந்தது.
“இங்க பார். நீதான் உனக்கு யாரும் இல்லன்னு நெனச்சுட்டு இருக்க. புரியுதா?, என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பி நடந்தாள். ஒன்றும் புரியாதவனாக திகைத்து நின்றேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.
Greeting Card ஐ திறந்தேன். பீத்தோவனின் சிம்பொனி ஒலித்தது. உள்ளிருந்த காகிதத்தில் I Love You Appu.
நான் அவள் சென்ற திசையைப் பார்த்தேன். நடந்துசென்றவள் திரும்பிப்பார்த்து சிரித்தாள். கவிதையாயிருந்தது. ஓடிச்சென்று அவள் கைகளைக் கோர்த்துக்கொண்டேன். ஹாஸ்டல் மணிக்கூண்டைப் பார்த்தேன் 14.02.2014.11:59: 50,51,52 இதோ என் முதல் காதலர் தினம் முடிந்துகொண்டிருக்கிறது. 57,58,59., நான் ஒரு சபிக்கப்பட்ட தேவதூதன்.
No comments:
Post a Comment