Monday, February 16, 2015

ஒருமுறை சொல்லிவிடு


 ”இன்று சொல்லிவிட வேண்டும்” என்றெண்ணியபடி காரை நிறுத்தினேன்.  சுதா வாசலிலேயே நின்றிருந்தாள். அவள் காத்திருக்கிறாள் என்பதே ஒரு கிளர்ச்சியளித்தது. எனக்காக அவள் காத்திருப்பது புதிதல்ல, ஆனால் இன்று அது ஒர் அற்ப மகிழ்வையளித்தது. அற்பத்தனங்களில் தானே காதலின் அற்புதகனங்கள் ஒளிந்திருக்கிறது. அரக்குவண்ணப் புடவை. அவள் சேலையுடுத்தவதைக் குறித்து வெண்பா எழுத வேண்டும். அத்தனை நேர்த்தி. அவள் செய்யும் எல்லாவற்றிலும் ஓர் நேர்த்தியிருக்கும். அவளுக்கே உரிய நேர்த்தி. அப்படி எழுதினால் அது நிறையிசை வெண்பாகவே இருக்கும். காரைத் திறந்து என் இடதுபுறத்தில் அமர்ந்துகொண்டாள். ”இன்று கண்டிப்பாக சொல்லிவிட வேண்டும்” என நினைத்தவாறே காரை நகர்த்தினேன்.
“எங்க போறோம்?” என்று கேட்டாள்.
“பீச்” என்றேன்.
“இந்நேரத்திலயா?”
“ஏன் இந்த நேரத்துக்கென்ன?”
சற்று யோசித்தவள் “சரி, ஆனா சீக்கிரம் வந்துடனும், நிறைய வேல இருக்கு” என்றாள்.
”ஓகே”.
எப்படிச் சொல்வது. இத்தனை நாட்களில் இப்படித் தோன்றியதேயில்லை. ஆனால் சில நாட்களாகவே நெஞ்சில் ஒரு குறுகுறுப்பு, நாளுக்கு நாள் என்னை வாட்டுகிறது. அவளிடம் இதை சொல்லியாக வேண்டுமென்ற தவிப்பு. சொன்னால்தான் அவளுக்கு தெரியுமென்றில்லை. எங்களுக்குள் வார்த்தைகளின் தேவையற்றுபோய் பல நாட்களாகிறது. இருப்பினும் அவளை நேசப்பதை நான் உரைத்தாகவேண்டும். ”இனி எனக்கு நீதான்” என அவள் விழிகளைப் பார்த்துச் சொல்லவேண்டும். ஆனால் எப்படி ஆரம்பிப்பது? காதலில் தொடக்கமும் முடிவும் எப்போதும் சற்று சிரமம் தான் நிகழ்த்திவிடுதல் சுலபம், நிகழ்வதுதான் காதல். சட்டென சொல்லிவிடலாம், அது சரியாக அமையவில்லையென்றால் சொல்வதற்கான பொருளை அது முழுவதுமாக பரிமாறாது, அவை வெறும் வார்த்தைகளாய் காற்றில் மிதக்கும். அதற்கோர் தேவகனம் வேண்டும், ஒர் உன்னத நொடி.
காரின் சவுண்ட்சிஸ்டத்தை உயிர்பித்தேன். ”பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்..” பிபிஎஸ்சின் வசீகரக்குரல், வெளியே வேடிக்கைப் பார்த்தபடி லேசாக தொடையில் தாளமிட்டாள், நான் பாடலுடன் சேர்ந்து விசிலடிக்கத் தொடங்கினேன். சட்டெனத் திரும்பியவள் விழிகளில் ஆச்சரியம் தாளமிட என்னைப் பார்த்தாள். நான் என்ன என்பதைப் போல் புருவத்தை உயர்த்த, அவள் ஒன்றுமில்லையென தலையசைத்தாள். அடிக்கடி அவளைத் திரும்பி பார்த்தபடி வந்தேன். பாடல் முடியும் தருவாயில்,
“சுதா, நீ ரொம்ப அழகாருக்க”
திரும்பியவள் உறைந்தே போனாள். கண்கொட்டாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். கயல்விழிகள்.
“நிஜமாதான் you look beautiful today” என்றேன்.
லேசாக சிரித்தவள் “ இன்னைக்கு மட்டும் தானா?” என்றாள் குறும்பாக,
“இல்ல. ரொம்ப நாளாவே”
“ரொம்ப நாளான்னா?”
“நான் உன்ன பாத்த நாள்ல இருந்து”. என்றேன்.
சிரித்தாள், சிரித்தேன், சிரித்தோம்.
“ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக் கிளியே அழகிய ராணி, அருகே வரலாமா” பிபிஎஸ் எங்களைத் தாலாட்டிக்கொண்டிருந்தார்.
கடற்கரையை அடைந்தோம். காரை நிறுத்தி செருப்பைக் கழட்டி காரினுள்ளே வைத்துவிட்டு வெறும்காலில் நடக்கத்தொடங்கினோம். கால்கள் மண்ணையறிந்து எத்தனை நாட்களாகிறது.  மணலில் நடக்கையில் அவள் கால்கள் இடற என் கையைப் பிடித்துக் கொண்டவள், விழியுயர்த்தி என்னைப் பார்த்தாள். அவை என்னிடம் ஏதோ கேட்க விழைந்தன, கண்களின் பேச்சுக்குத்தான் எத்தனையர்த்தங்கள். இதோ இங்கே ஓர் தேவகனம் என்னைக் கடந்துகொண்டிருக்கிறது. நான் என் மனதையுரைக்கவேண்டும், ஆனால் நான் சொல்லவில்லை. ஏதோ ஓர் தயக்கம். என்னால் சொல்லமுடியவில்லை, என்ன காரணம்? நெஞ்சில் ஒரு பரிதவிப்பு, நல்ல வாய்ப்பு பரிபோனது. ஆனால் என்ன செய்ய பள்ளிக்கூடச் சிறுவர்கள் போல் கண்ணாடி முன் நின்று கேவலமாக ஒத்திகைப் பார்த்துவரவா முடியும். நான் சொல்லியிருக்க வேண்டும். இனி அந்த நொடியை எண்ணி புலம்பிக்கொண்டிருக்கப் போகிறேன்.
”அங்க உட்காரலாமா?” ஒரு இடத்தைச் சுட்டி கேட்டாள். நான் அப்போது தான் கவனித்தேன். கடற்கரையெங்கும் ஏகத்திற்கும் கூட்டம்.  அவள் காட்டிய இடத்தில் சென்றமர்ந்தோம். கடலுக்கும் மேலே தொடுவானத்தில் பூர்ணசந்திரன் எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான். கடல் என் மனதைப்போல ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. பேரலைகள்.
ஒரு காதல் ஜோடி அலையில் விளையாடிக்கொண்டிருந்தது. எனக்கு இவள் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் அலைக்குள் தள்ளிவிடவேண்டும்போலிருந்தது.
“அலையில கால நனைக்கலாமா?” என் மனதைப் படித்துவிட்டாள்.  
“ம்ம்” என்றெழுந்தேன். கைநீட்டினாள். பிடித்துத் தூக்கினேன். எழுந்தவள்..
“அப்படியே கொஞ்ச தூரம் நடக்கலாம்” என்றாள். அவளுக்கும் என்னிடம் ஏதோ சொல்லவேண்டும். நான் தலையசைத்தேன்.
இருவரும் கலங்கரை விளக்கம் நோக்கி சிறிது தூரம் நடந்தோம். அலைகள் மாறி மாறி எங்கள் கால்களை முத்தமிட்டன.
“என்ன விஷயம்” என்றாள்.
“ஒன்னுமில்லையே”
“இல்ல ஏதோ இருக்கு”
“நிஜமா இல்ல”
“எனக்குத் தெரியும் எதோ விஷயம் இருக்கு”
“அப்போ அது என்ன’னு நீயே சொல்லு”
” அனு போன் பண்ணியிருந்தாளா?” என் முகம்சுருங்கியது. நான் எதிர்பார்த்தது வேறு.
“ஆமா” என்றேன்.
“என்ன சொன்னா?”
“நான் போன் எடுக்கல”
”ஏன்???”
“எதுக்கு அவளோட நான் பேசனும். நான் வேண்டாம்னு தூக்கியெறிஞ்சுட்டு போனவதான அவ”
“அதில்ல” அவளேதோ சொல்லவர
”அவள பத்தி பேசாத, ப்ளீஸ்.”
“சாரி” என்றாள்
இருவரும் எதுவும் பேசாமல் நடந்தோம். இருவருக்குமிடையே மௌனம் புகுந்து கொண்டது. என் முகத்தில் கோபம் குடியேறியது. இதே கடற்கரையில் அனு என் தோளைக் கட்டிக்கொண்டு நடந்தது நினைவுக்கு வந்தது. அந்த நினைவிலிருந்து வெளியே வர முயன்றேன். சுதா என் முன் நடந்துகொண்டிருந்தாள். ஓரலை வந்து காலகளை நனைத்தது. அவள் கால்களைப் பார்த்தேன். பாதங்கள் நனைந்திருந்தது, சேலை முனைகளில் துளி ஈரமில்லை. நடையில் கூட இருக்கும் அவளின் நேர்த்தி எனக்கு பிடிபடவேயில்லை. அவளே மௌனத்தை உடைத்தாள்.
”அணு எனக்கு போன் பண்ணியிருந்தா”
“ஓ ரெண்டு பேரும் ஒன்னுசேர்ந்தாச்சா, நடுவுல நாந்தான் பைத்தியக்காரன் இல்ல”
“அப்படி எல்லாம் ஒன்னுமில்ல, போன் பண்ணா பேசினேன்”
“என்னவாம்”
“அடுத்த வாரம் சென்னை வராலாம், உங்களயும் என்னையும் பாக்கனும்னு சொன்னா?”
“நீ வேணும்னா போ, நான் வரல”
“ என்ன மணி இது?” எப்போதாவதுதான் பெயர் சொல்லுவாள். அது அவளின் அஸ்திரம். அதற்கு எப்போதும் நான் வீழ்ந்துவிடுவேன். ஆனால் இன்று என் கோபம் போவதாயில்லை.
“அவ செஞ்சது எதையும் நான் மறக்கல, அவ மனசுக்கு பிடிச்சத அவ செஞ்சா ஆனா அதுக்கு என்ன ஏன் பலியாக்கினா? நிச்சயதார்த்தத்தப்போ கூட ஒரு வார்த்த சொல்லல. என்ன விடு, உன்கிட்ட அவ எதையாவது மறச்சிருக்காளா, அட்லீஸ்ட் உன்கிட்டயாது சொல்லிருக்கலாம்ல, அந்த அவமானத்த என்னால மறக்க முடியாது சுதா, நீ சொன்னாலும் நான் வரப்போறதில்ல”
“அவ சொல்லிருந்தா சம்மதிச்சிருப்பியா?, அவளுக்கு வேற வழி தெரியல”
“அப்போ அவ பண்ணது சரினு சொல்றியா? அது உனக்கு துரோகமா தெரியல? என்ன பொருத்தவரைக்கும் அது மண்ணிக்க முடியாத தப்பு.”
“மண்ணிக்க முடியாத தப்புன்னு எதுவும் இல்ல மணி. தப்பு செய்றதே மண்ணிச்சுருவாங்கன்ற நம்பிக்கைல தான். அவளுக்கு நம்மள விட்டா யாரிருக்கா? நமக்கும் அவளத்தவிர யாருமில்ல” அவள் சொல்லிமுடிக்கும்முன்.
“யாரும் வேண்டாம். நமக்கு இனி யாரும் வேண்டாம். உனக்கு நான், எனக்கு நீ. அவ்வளுவுதான்”
“ என்ன பேத்தல் இது, அணு நம்ம பொண்ணு. அவ ஓடிப்போய்ட்டான்னு இத மாத்திட முடியாது. இத்தன வயசுலயும் உனக்கு நான் மட்டும் போதும் வேற யாரும் வேண்டாம்னு சொல்ற. அணு சின்ன பொண்ணு, அவ வயசுல அவளுக்கு அந்த பையன் தான முக்கியமா தெரிவான். தப்புபண்ணீட்டான்னு அவள அப்படியே விட்டுடமுடியாது. அவளோட நல்லது கெட்டத பாத்து செய்ய வேண்டியது நாமதான்”
“நல்லது கெட்டது எதையும் அவ நம்மள கேட்டு முடிவெடுக்கல சுதா”
“இல்லங்க, இன்னைக்கு அவ உங்களுக்கு போன் செஞ்சது, உங்ககிட்ட மண்ணிப்பு கேட்க மட்டுமில்ல… அவ கர்பமா இருக்கா. இந்த நேரத்துல நாம அவ கூட இருக்கனும்.”
நான் எதுவும் பேசவில்லை. அணுவை உடனே பார்க்கவேண்டும்போலிருந்தது. என் கோபத்தைத் தேடிக்கொண்டிருந்தேன்.
“நானும் அவ மேல கோவமாதான் இருந்தேன். ஆனா அவ இதசொன்னதுக்கு அப்புறம், அந்த கோவமெல்லாம் எங்க போச்சுன்னு தெரில. அவள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரலாம். என்ன சொல்றீங்க??”
நான் மௌனமாகவே இருந்தேன்.
“ப்ளீஸ் சரி’ன்னு சொல்லுங்க.”
நான் சரியென தலையசைத்தேன். அவள் முகம் மலர்ந்தது, சந்திரன் மேகத்திற்கு பின் சென்று ஒளிந்துகொண்டான். என் கைகளைக் கோர்த்துக்கொண்டாள்.
“லவ் யூ” சொன்னது சுதா. நான் ஸ்தம்பித்து நிற்க என்னைப் பார்த்து புன்னகைத்தாள். அவளைப் பெண் பார்க்க சென்றபோது முதலில் என்னைப் பார்த்து சிரித்த அதே சிரிப்பு. 30 வயது குறைந்ததைப் போல் உணர்ந்தேன்.
“இத சொல்லத்தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்” என்னைப் பார்த்து புருவமுயர்த்தியவள்
“அப்ப சொல்லுங்க”
“ஐ லவ் யூ” ஐம்பத்தைந்து வயதில் வெட்கப்பட்டுக்கொண்டிருந்தேன்.


No comments:

Post a Comment